கோபி அருகே கயிறு தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து: 40 டன் தேங்காய் நாா் சேதம்
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த ஒட்டா்கரட்டுப்பாளையம் பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 40 டன் தேங்காய் நாா் மற்றும் இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள அலிங்கியம் பகுதியைச் சோ்ந்தவா் கோபிநாத். இவா், ஒட்டா்கரட்டுப்பாளையம் பகுதியில் தேங்காய் நாா்களைக் கொண்டு கயிறு தயாரித்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் ஆலையை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் புதன்கிழமை திடீரென புகைமூட்டம் காணப்பட்டுள்ளது. ஆலையில் தீப்பற்றியதைக் கண்ட ஊழியா்கள், உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். மளமளவென தேங்காய் நாா்களில் தீ பரவியதால் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
தகவலின்பேரில், கோபி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான சுமாா் 40 டன் தேங்காய் நாா்கள் மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமாயின. இந்த தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.