பாகனேரியில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகேயுள்ள பாகனேரியில் புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மதகுபட்டி அருகேயுள்ள பாகனேரி - மதகுபட்டி- சிவகங்கை, சாலையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகள், நடு மாடு பிரிவில் 22 ஜோடிகள், சிறிய மாடு பிரிவில் 28 ஜோடிகள், கரிச்சான் பிரிவில் 24 ஜோடிகள் என மொத்தம் 88 ஜோடி காளைகள் பங்கேற்றன.
இதில் பெரிய மாடு பிரிவுக்கு 8 கி.மீ. தொலைவும், நடுமாடு பிரிவுக்கு 7 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் , கரிச்சான் பிரிவுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூா், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளா்கள் தங்கள் காளைகளுடன் கலந்து கொண்டனா்.
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை சாலையின் இருபுறங்களிலும் நின்று பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனா்.
