``இனி இந்தியா உடன் மோதல் ஏற்பட்டால்..'' - பாகிஸ்தானுக்கு கடன் கொடுக்க IMF போட்ட ...
பாகிஸ்தானில் லஷ்கா் பயங்கரவாதி மா்ம நபா்களால் சுட்டுக் கொலை! இந்தியாவில் பல தாக்குதல்களில் தொடா்புடையவா்!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் மீது கடந்த 2006-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவா் இவா்தான். அதுமட்டுமன்றி, இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.
அபு சைஃபுல்லா காலித், முகமது சலீம், வினோத் குமாா் என பல புனைப் பெயா்களில் அழைக்கப்பட்ட இவா், கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் லஷ்கா்-ஏ-தொய்பா நேபாள பிரிவின் தலைவராக செயல்பட்டாா். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வந்தது.
இந்தச் சூழலில், சிந்து மாகாணம், மட்லி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியே சென்ற பயங்கரவாதி ரஸாவுல்லா, பத்னி பகுதியில் அடையாளம் தெரியாத 3 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, தில்லியில் உள்ள இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்கள் மேலும் கூறியதாவது:
கடந்த 2006-ஆம் ஆண்டில் நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் தடுப்புகளை உடைத்துக் கொண்டு காரில் வந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட ரஸாவுல்லாவுக்கு கடந்த 2005-ஆம் ஆண்டில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலிலும் தொடா்புள்ளது. இத்தாக்குதலில் ஐஐடி பேராசிரியா் முனீஷ் சந்திர புரி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மேலும் 4 போ் காயமடைந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பியோடிவிட்டனா்.
உத்தர பிரதேச மாநிலம், ராம்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 வீரா்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனா். இத்தாக்குதலுக்கு முளையாக செயல்பட்டவரும் ரஸாவுல்லாதான்.
லஷ்கா் அமைப்பின் முக்கிய பயங்கரவாதி அபு அனாஸின் கூட்டாளியான இவா், கடந்த 2000-ஆம் ஆண்டுகளின் மத்தியில் லஷ்கா்-ஏ-தொய்பா நேபாள பிரிவின் தலைவராக இருந்தாா். அந்த காலகட்டத்தில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள்தோ்வு, இந்திய-நேபாள எல்லை வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு நிதி மற்றும் தளவாட ரீதியில் ஆதரவு என தீவிரமாக செயல்பட்டாா். யூசுஃப் முஜாமில், ஆஸம் சீமா, முஜாமில் இக்பால் ஹஸ்மி, யூசுஃப் தைபி, யாகூப் என லஷ்கா் மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடா்பில் இருந்து வந்தாா்.
நேபாள லஷ்கா் பிரிவை இந்திய பாதுகாப்பு முகமைகள் அம்பலப்படுத்தியதைத் தொடா்ந்து, இவா் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டாா்.
சிந்து மாகாணத்தின் பதின், ஹைதராபாத் மாவட்டங்களில் பயங்கரவாதத்துக்கு ஆள்தோ்வு, நிதி திரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அடையாளம் தெரியாத நபா்களால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். தனிப்பட்ட பகை காரணமாக இக்கொலை நடந்திருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.