பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது: இரா.முத்தரசன்
பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
சென்னை தியாகராய நகரில் உள்ள அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது:
சிதம்பரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேண்டும் என அழைப்பு விடுத்தாா். அவரது இந்த அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா ஒருபோதும் கூறவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி மதவாத கூட்டணி, தமிழகத்தில் திமுக கூட்டணிபோல் எந்தவொரு கூட்டணியும் இத்தனை ஆண்டுகள் நீடித்ததே கிடையாது. திமுக கூட்டணிதான் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.