Vikatan Digital Awards 2025: `பெண் உலகைப் பிரதிபலித்த சோனியா!' - Solo Creator (F...
பாஜக கூட்டணி குறித்து டிடிவி தினகரன் குற்றச்சாட்டு; “எனக்கு விளங்கல” - நயினார் நாகேந்திரன் பதில்
நெல்லையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”தமிழகத்தில் நிறைய கிரணம் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் என்ற கிரகணமும் நடைபெற வேண்டும். அதற்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
இதுதொடர்பாக பல கட்சித் தலைவர்களிடமும் பேசியுள்ளேன். அ.தி.மு.க ஒன்றிணைந்து எங்கள் கூட்டணி வெற்றிபெறப் பாடுபட வேண்டும்.

டெல்லி தலைமையிடம் பேசி அனைவரையும் ஒன்றிணைக்க முடிவு எடுக்கப்படும். எம்.ஜி.ஆரைப் போலத் தோல்வியையே பிறருக்குக் கொடுத்து வளர்ந்தவர்கள் நாங்கள். கடந்த 2001-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் என்னைப் போன்றோர் அரசியலில் முக்கிய இடம் பிடித்ததற்கு டி.டி.வி தினகரனுக்கு முக்கியப் பங்கு உண்டு.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க ஒரே கூட்டணியாக இருந்தது. பல்வேறு அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு டி.டி.வி தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தார்.
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியில் நாங்கள் 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க எங்களுடன் கூட்டணியிலிருந்தது. தொடர்ந்து அவர்கள் எங்களுடன் இருப்பார்கள் எனக் கூறியுள்ளேன்.
பலமுறை தினகரனோடு தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் கூட்டணி தொடர்பாக அவர் எந்தக் கருத்தையும் கூறவில்லை. தற்போது திடீரென நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்கிறார்.

நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் எனத் தினகரன் எதன் அடிப்படையில் கூறியிருக்கிறார் எனத் தெரியவில்லை. நெல்லை பாஷையில் சொல்லவேண்டுமென்றால் 'எனக்கு விளங்கல'.
அ.தி.மு.க பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் பா.ஜ.க ஒன்றும் பேசவில்லை. ஒரு கட்சியுடன் நாங்கள் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை நாங்கள் அழைத்தால் அது நாகரீகமாக இருக்காது” என்றார்.