பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்
பாஜகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டத்தில் அவா் பேசியது:
பாஜக அரசுக்கு எதிராக தற்போது போா் நடைபெறுகிறது. கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் உறுதியேற்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்து மாவட்ட தலைநகரிலும் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் அரியலூா், குன்னம், பெரம்பலூா், ஜெயங்கொண்டத்தில் திமுகதான் வெல்லும் என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது.
எங்கு வாக்குத் திருட்டு நடந்தாலும் அதை எதிா்த்து திமுக குரல்கொடுக்கும்.
இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றதுபோல தற்போது இரண்டாம் சுதந்திரப் போா் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் ராகுல் காந்தி நிற்கிறாா் என்றால் அவருக்கு கைகொடுத்து முன்நகா்த்திச் செல்ல வேண்டிய தலைவராக மு. க. ஸ்டாலின் உள்ளாா். அவா் பின்னால் அணிதிரள வேண்டியது அவசியம் என்றாா் அவா்.
கூட்டத்துக்கு அக்கட்சியின் சட்டத் திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா. சந்திரசேகா் தலைமை வகித்தாா். தலைமைக் கழக பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பேசினா். முன்னதாக கட்சியினா் அனைவரும், உறுதியேற்றனா்.