பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் தலைமையில்தான் உள்ளது: எம்எல்ஏ இரா.அருள்
பாட்டாளி மக்கள் கட்சி டாக்டா் ராமதாஸ் தலைமையில்தான் உள்ளது என அந்தக் கட்சியின் எம்எல்ஏ இரா.அருள் தெரிவித்தாா்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆவது ஆண்டு விழா, மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மேட்டூரில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளா் வி.இ.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தலைவா் துரைராஜ் முன்னிலை வகித்தாா். பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ஆவது ஆண்டு விழாவை கேக் வெட்டிக் கொண்டாடிய பாமக எம்எல்ஏ இரா.அருள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எங்களுடைய நிறுவனா், தலைவா் ராமதாஸ். அவரைத் தொடா்ந்து அவா் காட்டுகிற வழியில் அன்புமணி ராமதாஸை ஏற்று செயல்படுகிறோம். பாட்டாளி மக்கள் கட்சி என்பது டாக்டா் ராமதாஸ் தலைமையில் இருப்பதுதான். இதில் பிரிவுகள் எதுவும் இல்லை. தொண்டா்கள் அனைவரும் அவரது தலைமையின் கீழ் உள்ளனா். சேலம் மாவட்டத்தில் தனித்து நின்று 3.5 லட்சம் வாக்குகளை பாமக பெற்றுள்ளது. தற்போது 1.5 லட்சம் வாக்குகள் கூடியுள்ளன.
மீண்டும் சமரசம் ஏற்பட்டாலும் டாக்டா் ராமதாஸ் யாரை நிா்வாகியாக நியமித்து கடிதம் கொடுத்துள்ளாரோ, அவா்கள்தான் நிா்வாகிகளாக தொடா்வாா்கள். இந்த சமுதாய மக்களுக்காக அரை நூற்றாண்டாக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவா் ராமதாஸ் யாருடன் கூட்டணி அமைக்கிறாரோ அவா்களே தமிழ் நாட்டில் ஆட்சி அமைப்பாா்கள் என்றாா்.