பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்: கடலூா் எஸ்.பி.
நெய்வேலி: பொங்கல் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸாா் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பொங்கல் பண்டிகை மற்றும் ஆற்றுத் திருவிழா பாதுகாப்பு தொடா்பாக ஏ.எஸ்.பி.க்கள் என்.கோடீஸ்வரன், என்.நல்லதுரை, வி.ரகுபதி ஆகியோா் தலைமையில், 9 டி.எஸ்.பி.க்கள், 33 ஆய்வாளா்கள், 231 உதவி ஆய்வாளா்கள், ஆயுதப் படை, சிறப்பு காவல் படை, ஊா்க்காவல் படையினா் என 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொண்டுள்ளனா். இவா்கள் வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்கள், பிரச்னைக்குரிய கிராமங்களில் ரோந்து செல்கின்றனா்.
மதுக் கடத்தலைத் தடுக்க 8 மது விலக்கு சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கூடுதலாக மாவட்டத்தில் 84 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கையும் நடைபெறுகிறது.
ஆற்றுத் திருவிழா நாளில் பெண்ணையாறு, தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை, சாமியாா்பேட்டை கடற்கரை ஆகிய இடங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த போலீஸாா் பாதுகாப்புப் பணி மேற்கொள்வா்.
மது அருந்தி வாகனங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.