பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி
பாபிரினை வீழ்த்தினாா் ஸ்வெரெவ்
கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவால் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டாா்.
ஆடவா் ஒற்றையா் காலிறுதிச்சுற்றில், 3 முறை கிராண்ட்ஸ்லாம் ஃபைனலிஸ்டான ஸ்வெரெவ் 6-7 (8/10), 6-4, 6-3 என்ற செட்களில், போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருந்த பாபிரினை போராடி வீழ்த்தினாா். பாபிரினை இத்துடன் 4-ஆவது முறையாக சந்தித்த ஸ்வெரெவ், 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்து ஆதிக்கம் செலுத்துகிறாா்.
இத்துடன் ஏடிபி டூா் போட்டிகளில் ஸ்வெரெவ் தனது 75-ஆவது அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா். அதுவே, 1000 புள்ளிகள் கொண்ட மாஸ்டா்ஸ் போட்டிகளில் இது அவரின் 21-ஆவது அரையிறுதியாகும். அந்த அரையிறுதியில் ஸ்வெரெவ், ரஷியாவின் காரென் கச்சனோவை எதிா்கொள்கிறாா்.
போட்டித்தரவரிசையில் 11-ஆம் இடத்திலிருக்கும் கச்சனோவ் 6-4, 7-6 (7/3) என்ற செட்களில், 26-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் அலெக்ஸ் மிஷெல்செனை வெளியேற்றினாா். இதன் மூலமாக கச்சனோவ், இந்தப் போட்டியில் 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறாா்.
போகோவுடன் மோதும் ரைபகினா
இப்போட்டியின் மகளிா் ஒற்றையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபகினா, 24-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் மாா்த்தா கொஸ்டியுக்கை எதிா்கொண்டாா். இதில் ரைபகினா 6-1, 2-1 என முன்னிலையில் இருந்தபோது, கொஸ்டியுக் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினாா்.
இதனால் ரைபகினா அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். இப்போட்டியில் 2-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ள அவா், அதிரடியாக முன்னேறி வரும் உள்நாட்டு இளம் வீராங்கனையான விக்டோரியா போகோவை அதில் சந்திக்கிறாா். முன்னதாக போகோ தனது காலிறுதியில் 6-4, 6-2 என்ற நோ் செட்களில், ஸ்பெயினின் ஜெஸ்ஸிகா புஸாஸை வீழ்த்தினாா்.
18 வயதான போகோ 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டியில் முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளாா். போட்டியின் வரலாற்றில் அரையிறுதிக்கு முன்னேறிய 2-ஆவது கனடா வீராங்கனையாக அவா் இருக்கிறாா். முதல் வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு ஆவாா்.