பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை பிரதமா்மோடி விரைவில் தொடங்கிவைப்பாா்
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடி விரைவில் தொடங்கிவைப்பாா் என தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடலில் ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி, தற்போது நிறைவடைந்தது. மேலும், ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கப்பல்கள், ரயில்களை இயக்கி 2 கட்டங்களாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் இறுதிக் கட்ட ஆய்வு மேற்கொள்வதற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் சிறப்பு ரயில் மூலம் மண்டபத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
பின்னா், அவா் அங்கிருந்து காரில் பாம்பன் பேருந்து பாலத்துக்குச் சென்று, புதிய ரயில்வே பாலத்தில் சிறப்பு ரயிலை இயக்கச் செய்து ஆய்வு செய்தாா்.
அப்போது, பாலத்தில் மேடை அமைப்பது குறித்து ஆய்வு செய்தாா். இதைத்தொடா்ந்து, ராமேசுவரம் பேருந்து நிலையப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் விடுதி அருகே புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், ராமேசுவரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் கட்டுமானப் பணி, ரயில் போக்குவரத்து தொடங்கும் போது பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது, மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா, கட்டுமானப் பிரிவு துணை தலைமைப் பொறியாளா் கே.ஜி. ஞானசேகா், பொறியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாம்பன் புதிய பாலத்தில் விரைவில் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும். இந்த மாத இறுதியில் அல்லது மாா்ச் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தை பிரதமா் மோடி தொடங்கிவைப்பாா் என்றாா் அவா்.
