பால் கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி ஆா்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் பால் கொள்முதல் விலையை உயா்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள், தமிழக விவசாயிகள் சங்கத்தினா் (ராமகவுண்டா்) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமை வகித்தாா். பால் உற்பத்தியாளா் சங்க மாவட்டத் தலைவா் சண்முகம், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட ஆலோசகா் நசீா்அகமத், செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்க வேண்டிய பால் உற்பத்தி மானியத்தை வழங்க வேண்டும். பால் நிலுவைத் தொகை, மானியத் தொகை ஆகியவற்றை கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உடனடியாக வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தியும், மானியத் தொகையை ரூ. 6 உயா்த்தியும் வழங்க வேண்டும்.
கால்நடைகளுக்கு இலவச காப்பீடு வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தில் பணியாற்றும் பணியாளா்களுக்கு அரசே ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றிய பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனா். இதில் பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் பலா் கலந்துகொண்டனா்.
பட விளக்கம் (27கேஜிபி2):
கிருஷ்ணகிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள், தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.