பால்டிக் வானில் பறவையாய் பறக்கும் கனவுப் பயணம்! - குட்டி தேசங்களுக்கு ஒரு விசிட்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இந்தியாவிலிருந்து வந்து நெதர்லாந்தில் செட்டில் ஆகி பத்து வருடங்கள் நிறைந்து விட்டன. என்றாலும் இந்திய நினைவுகள், உறவுகளை மறக்க முடிவதில்லை. அதைப் போலவே ஆனந்த விகடனையும் என்னால் மறக்க முடியாது . வாரந்தோறும் வாங்கிப் படித்தது இன்றும் நினைவில் இருக்கிறது .
என் நண்பர்களிடம் ஏதாவது விஷயம் (படமோ அதன் விமர்சனமோ, சிறுகதையோ, அரசியலோ அல்லது கிசுகிசுவோ) பேசும்போது - எல்லாரும் விகடன் வாசகர் என்று என்னை பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள்.
தாங்க்ஸ் டு இணைய இதழ்கள். இப்போதும் இந்திய மண்ணின் மணத்தை நுகர முடிகிறது.
சுற்றுலா கட்டுரைகள் பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தேன். அனுபவங்கள், ரசனைகள், பார்வைகள் எல்லாம் ஒருவருக்கொருவர் வேறுபடும் என்பதையும் எழுத்தில் வரும்போது எவ்வளவு அற்புதமாக மாறுகிறது என்பதையும் உணர முடிந்தது.

நானும், என் மனைவி ஈஸ்வரி, மகன் தினேஷ் உடன் நிறைய இடங்கள் சுற்றியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் எங்கள் திருமண நாளை ஒட்டி வரும் நாட்களில் பள்ளிக்கும் அந்த சமயம் விடுமுறை என்பதால் பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறோம்.
வேலைப் பளு இல்லாமல் வித்தியாசமான இடங்களை மனிதர்களை பார்ப்பதில் எங்களுக்கு மிகவும் ஆசை.
சென்ற வருடம் கனடா சென்று நயாகரா நீர்வீழ்ச்சியை அதன் அழகை அந்த பிரமாண்டத்தை பார்த்து ரசித்தோம்.
உறவுகளுக்கு வர்ணனையாக விளக்குவது டன் யூ-ட்யூப் மூலம் பாடல்களின் பின்னணியில் காட்சிகளாகப் போடுவது வழக்கம்.
இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக ஐரோப்பா கண்டத்தில் மிகவும் பிரபலம் அடையாத சில குட்டி தேசங்களை காண விரும்பி பால்டிக் ஸ்டேட்ஸ் ஐ (எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா) தேர்ந்தெடுத்தோம். இது பால்டிக் கடலின் கிழக்குக் கரையில் உள்ள நாடுகள். வரைபடத்தில் ஊன்றிப் பார்த்தால்தான் தெரியும்.

இருபுறமும் அழகான பசுமையான உயரமான மரங்களுடன் எந்த ஒரு வாகனமும் காணப்படாத சீரான சாலையில் நாங்கள் மட்டும் காரோட்டிக் கொண்டு போனது சிலிர்ப்பான அனுபவம்.
எஸ்டோனியா நாட்டின் தலைநகரமான டலின் (Talinn) நகரில் ரோபாட் மூலம் பல பணிகள் நடைபெறுவதை கண்டு வியந்தோம். தன்னிச்சையாக வந்து உணவு , மற்ற பொருட்களை கொடுத்து செல்லும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற சூட்கேஸ் போன்ற ரோபாட்கள் ஆப்பின் (app) மூலம் இயங்குகின்றன. கையடக்கமான ஒரு அலைபேசியை உபயோகித்து எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் என்பது வியப்பாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது. மக்களும் சுலபமாக அதற்கு பழக்கப் பட்டு விடுகிறார்கள்.
லாட்வியா தேசத்தில் சிகுல்டா நகரில் ஒரு வித்தியாசமான வியப்பூட்டும் அனுபவம். நாங்கள் மிகவும் அனுபவித்து மகிழ்ந்த அந்த உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
பறவையைப் போல பறக்கும் அனுபவத்தை அங்கே பெற்றோம். கொஞ்சம் பயம், தயக்கம், எதிர்பார்ப்பு எல்லாம் கலந்து படபடப்பாக இருந்தது. பின்வாங்க நினைத்தாலும் செய்து பார்க்க வேண்டும் என்ற சவாலான உணர்வு ஒருபுறம் முன் தள்ளியது.
“சிறகுகள் நீளுதே, பறவைகள் போலவே, விண்வெளி தாண்டியே, துள்ளி துள்ளி போகுதே” .. என்ற பாடலை நினைவில் சுமந்து இயந்திரப் பறவையால் நாங்கள் பறந்தோம்.

ஜெர்கிளிஸ் (zip -line ride on the trolley route & is equipped with a aviation turbine for extra power) என்னும் வானப் பயணம் முதன்முதலில் அங்கு பார்த்தேன்.
டிராலி போல அமைத்து வானில் பறக்க வைக்க அதிக சக்தியுடன் கூடிய டர்பைன் என்ஜின் இணைந்திருக்கிறார்கள். 100 கிமீ வேகத்தில் பறக்க வைக்க தொழில்நுட்பம் உதவுகிறது. காஜா பள்ளத்தாக்கின் மேல் வேகமாக மிக உயரத்தில் (55 மீட்டர்) அநாயாசமாக பறக்கும் ஒரு பறவையைப் போல உணர்ந்தேன்.
நாங்கள் மூவருமே இந்த அனுபவத்தைப் பெற்றோம். பறக்கும் போது வீடியோ எடுப்பதற்கு வசதியாக கையில் ஒரு ஸ்டிக்குடன் கூடிய action காமிரா (Go Pro) கொடுத்து விடுகிறார்கள். நம் பயணம் முழுவதும் காமிராவில் படம் பிடிக்கப்படுகிறது. நம்முடைய உணர்வுகள், பறக்கும் உயரம், தொலைவு மற்றும் சுற்றிலும் உள்ள காட்சிகளை அநாயாசமாக பிடித்துத் தள்ளிவிடுகிறது.
சாகசமான இந்த பயணம் முடிந்ததும் முன்னே சென்ற கேபிள் கார் திரும்பி வரும்போது தொடங்கிய இடத்துக்கு கொண்டு வந்து விடுகிறார்கள்.

ஆனால் அந்த கேபிள் கார் திரும்பி வர 2 நிமிடங்கள் ஆகும். அந்த 2 நிமிடம் எவ்வளவு நீளம் என்று அன்று உணர்தோம். பறவை போல் கயிற்றின் மூலம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த பொது நானும் என் மனைவியும் பேசியதும், சிரித்தும், பயந்ததும், புலம்பியதும் என்றும் நினைவில் நிற்கும் :)
டீன் ஏஜில் இப்போதுதான் தலைவைத்திருக்கும் என் மகனும் இந்த சிலிர்ப்பூட்டும் பயணத்தை மிகவும் அனுபவித்து ரசித்தான்.
பறவைப் பார்வையில் இயற்கையை ரசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். மறக்க முடியாத பரவசமூட்டும் சாகசமான ஒரு பறக்கும் அனுபவம்.
நன்றியுடன்
நவநீதன் சங்கரவேல்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.