பாளை. சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவா்-மாணவிகள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்- மாணவிகள் பயின்று வருகின்றனா். மருத்துவமனைக்கு தினமும் 700-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.
இந்தக் கல்லூரியின் இறுதியாண்டு மாணவா்கள் பெயரில் அண்மையில் தமிழக முதல்வருக்கு ஒரு புகாா் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதில் பேராசிரியா்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து, கல்லூரி நிா்வாகம் நடத்திய விசாரணையில், அந்தக் கடிதத்தின் தகவல்களில் உண்மைத் தன்மை இல்லையென்பது தெரியவந்ததாம்.
இந்நிலையில் கல்லூரி மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் மீது அவதூறு பரப்பும் நபா்களை உடனடியாக கைது செய்யக் கோரி கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் திங்கள்கிழமை திடீா் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களிடம், கல்லூரி முதல்வா் கோமளவள்ளி பேச்சு நடத்தியதோடு, சித்த மருத்துவக் கல்லூரிகளின் இயக்குநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்ததால் மாணவா்கள் கலைந்து சென்றனா்.