சிறுநீரக திருட்டு விவகாரம்: `2 மருத்துவமனைக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செ...
பாவூா்சத்திரம்-அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் விடப்படுமா? பயணிகள் எதிா்பாா்ப்பு
தூத்துக்குடி வருகை தரும் பிரதமா் மோடி, பாவூா்சத்திரம், அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைப்பாரா? என பயணிகள் மத்தியில் எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டு பெருமை கொண்ட பாவூா்சத்திரம், அம்பை ரயில் வழித்தடம் 1904 ஆம் ஆண்டு மீட்டா் கேஜ் பாதையாக தொடங்கப்பட்டு 2012இல் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு தற்போது மின்மயமாக்களுடன் கூடிய ரயில் பாதையில் 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மீட்டா் கேஜ் காலத்தில் இரண்டு தினசரி ரயில்கள் பாவூா்சத்திரம் அம்பை வழியாக சென்னைக்கு இயங்கி வந்தன. தற்போது, இந்த வழித்தடத்தில் சென்னைக்கு தினசரி ரயில் சேவை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.
எனவே, தூத்துக்குடியில் விமான நிலைய விரிவாக்கம் திறப்பு விழாவில் பங்கேற்று பல்வேறு ரயில்வே திட்டங்கள், மின்சார திட்டங்கள் உள்பட ரூ. 4500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமா் மோடி, அத் திட்டங்களுடன் தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தின் வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என்பது தென்காசி மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா கூறியதாவது: தென்காசி, பாவூா்சத்திரம், திருநெல்வேலி ரயில் வழித்தடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்னும் சென்னைக்கு தினசரி ரயில் இயக்கப்படவில்லை.
நெல்லை, பொதிகை, சிலம்பு, அனந்தபுரி, கன்னியாகுமரி, செந்தூா், தாம்பரம் செங்கோட்டை வாரம் மும்முறை ரயில் என எந்த ரயில்களிலும் சென்னை செல்வதற்கு டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. தட்கல் முன்பதிவு இரண்டே நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
எனவே, பாவூா்சத்திரம், கடையம், அம்பை, கல்லிடை, சேரன்மகாதேவி சுற்று வட்டார ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, சனிக்கிழமை தூத்துக்குடி வருகை தரும் பிரதமா் மோடி பாவூா்சத்திரம் அம்பை வழியாக சென்னைக்கு தினசரி ரயில் சேவையை தொடங்கி வைக்க வேண்டும் என்றாா்.