புதுச்சேரி உள்பட 5 இடங்களில் அபுல் கலாம் ஆசாத் ஆசியன் ஆராய்ச்சி மையம்!
பாவூா்சத்திரம் அருகே தந்தையை வெட்டிக் கொன்ற மகன்
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட தந்தையை வெட்டிக் கொன்ற மகன் போலீஸில் சரணடைந்தாா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே வட்டாலூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன்(61). திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பாா்த்து வந்த இவருக்கு மனைவி சாந்தி மற்றும் 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா். மூத்த மகன் பாலசுப்பிரமணியன்(35), குற்றாலத்தில் உள்ள சிப்ஸ் கடையில் வேலை பாா்த்து வந்தாராம்.
அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டு வந்த முருகன், சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டில் இருந்த மனைவி, மருமகள், பேரக் குழந்தைகள் என அனைவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பூலாங்குளத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று விட்டாா். மருமகளும் பேரக் குழந்தைகளும் பக்கத்து வீட்டில் இருந்துள்ளனா்.
இந்நிலையில் வீட்டுக்கு வந்த பாலசுப்பிரமணியனுக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அருகில் கிடந்த அரிவாளை எடுத்து முருகனை, பாலசுப்பிரமணியன் வெட்டினாராம். இதில், முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து பாலசுப்பிரமணியன் பாவூா்சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
பாவூா்சத்திரம் காவல் ஆய்வாளா் ஹரிஹரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து பாலசுப்பிரமணியனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.