பா்கூா் கொள்ளை சம்பவம்: ஆந்திரத்தில் முகாமிட்டுள்ள போலீஸாா்
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே விவசாயியைத் தாக்கி வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முகமூடி கொள்ளையா்களுக்கு தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் ஆந்திரத்தில் முகாமிட்டுள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள கல்லேத்துப்பட்டியைச் சோ்ந்த சுந்தரேசன் (55), அவரது மனைவியைத் தாக்கி பிப்.13-ஆம் தேதி 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றவா்களின் அடையாளத்தை அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே திருப்பத்தூா், பா்கூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கா்நாடக மாநிலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திலும் தனிப் படை போலீஸாா் முகாமிட்டு கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.