பிங்க் பந்து கிரிக்கெட்டில் அசத்தும் டிராவிஸ் ஹெட்..! மீண்டும் ஆதிக்கம் செலுத்துவாரா?
பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அடுத்த டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி அடிலெய்டில் இரவு - பகல் ஆட்டமாக நடைபெறுகிறது.
பிங்க் பந்துகளில் 12 இன்னிங்ஸ்களில் 543 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 49.36ஆக இருக்கிறது. அதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 175 ரன்களை குவித்துள்ளார்.
குறிப்பாக அடிலெய்டில் டிராவிஸ் ஹெட் 4 பகலிரவு ஆட்டங்களில் 289 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 72.25ஆக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகபட்ச ரன்னான 175 ரன்களை அடித்ததும் அந்த ஆடுகளத்தில்தான்.
இந்த நிலையில் ஆஸி. பேட்டர் டிராவிஸ் ஹெட் கூறியதாவது:
பேட்டிங் செய்வதற்கு கடினமான விக்கெட்டாக இருக்கும் அடிலெய்ட் ஆடுகளம். பல வழிகளில் நாம் ரன்களை எடுக்க வேண்டியிருக்கும். இது எனக்கு ஒத்துவருமென நினைக்கிறேன். நான் அங்கு அதிகமாக விளையாடி இருக்கிறேன். கடந்த காலங்களில் அந்த ஆடுகளத்தில் ரன்களை குவித்துள்ளேன். இந்தாண்டும் அதையே செய்யவிரும்புகிறேன்.
இந்த வாரமும் எனக்கு சிறப்பாகவே சென்றது. எனது சொந்த ஓய்வறையில் நான் நன்றாக ஓய்வெடுத்தேன். எனது நண்பர்களும் குடும்பத்தினருக்கு மத்தியில் விளையாடியது மகிழ்ச்சி. அது எனக்கு உத்வேகத்தை அளித்தது. அடுத்த போட்டிக்காக காத்திருக்கிறேன்.
பகல் - இரவு ஆட்டம் எப்போதும் சிறப்பானது. அந்தச் சூழலே சிறப்பாக இருக்கும். பிங்க் பந்து வித்தியாசமாக செயல்படும். ஆடுகளமும் தேவைக்கு அதிகமாகவே கொடுக்கும். அதனால் அடுத்த வாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார்.