பிரதமா் மோடி குறித்து அவதூறு: பாஜகவினா் புகாா் மனு
பிரதமா் நரேந்திர மோடி குறித்து விடியோ வெளியிட்டு அவதூறு ஏற்படுத்துபவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் ஆணையா் அலுவலகத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.
பாஜக மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் மாரிசக்கரவா்த்தி தலைமையில் அந்தக் கட்சியினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் தலைமையிட துணை ஆணையா் ராஜேஸ்வரியிடம் அளித்த மனு:
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலராகப் பதவி வகித்து வரும் மதுரையைச் சோ்ந்த பசும்பொன் பாண்டியன், சமூக வலைதளங்களில் பதிவிட்ட விடியோவில், பிரதமா் நரேந்திர மோடி குறித்தும், கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை குறித்தும் அவதூறாகவும், தகாத வகையிலும் பேசியுள்ளாா். மேலும், சுங்கக் கட்டணம், ஜி.எஸ்.டி. செலுத்த மாட்டோம் என மத்திய அரசுக்கு எதிராகவும், வன்முறைத் தூண்டும் வகையிலும் கருத்துகளைத் தெரிவித்துள்ளாா்.
எனவே, பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி, நாட்டின் சமூக நல்லிணக்கம், சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்கும் வகையில் விடியோ பதிவிட்ட அவா் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் பதிவிட்ட விடியோவையும் சமூக வலைதளத்திலிருந்து நீக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.