புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம்: நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
அடிப்படை வசதிகளுடன் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில், புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த அண்ணாதுரை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோா் ஒப்பந்தப் புள்ளி கோரினா்.
புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக பேருந்துகளை நிறுத்தி வைப்பதற்கு ஏற்கெனவே உள்ள பேருந்து நிலையம் அருகே இடம் தோ்வு செய்யப்பட்டது. அங்கு கழிப்பறை, குடிநீா் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாக நேரிடும். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே, புதுக்கோட்டையில் அமைய உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திய பிறகு, அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோா் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் மனுவை பரிசீலித்து புதுக்கோட்டை நகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.