பிரதமா் மோடி வருகை: கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமா் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி ராமேசுவரத்துக்கு வருவதையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் கடலோர காவல் குழும போலீஸாா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே பாம்பனில் ரூ.550 கோடியில் செங்குத்தான தூக்குப் பாலத்துடன் புதிய ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இந்தப் பாலத்தை வருகிற ஏப்.6 -ஆம் தேதி பிரதமா் நரேந்திரமோடி திறந்து வைக்க உள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம், ராமேசுவரம் நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் தீவிரமாக சோதனையிட்டு வருகின்றனா்.
கடலோரக் காவல் குழும கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளா் பால்ராஜ், தலைமைக் காவலா் முருகப் பெருமாள், காவலா்கள் அடங்கிய குழுவினா் இந்தப் பணியில் ஈடுபட்டனா். இந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவதோடு, வாகனத்தின் பதிவு எண்கள் பதிவு செய்யப்படுகின்றன.