பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்: அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்தோ்வு நடைபெற்ற பள்ளிகளில் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் நேரில் ஆய்வு செய்தாா்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் பிப். 7 முதல் 14-ஆம் தேதி வரை நடத்தப்படும். மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் சுமாா் 6 லட்சம் மாணவா்கள் இந்தத் தோ்வில் பங்கேற்கவுள்ளனா் என்று தோ்வுத் துறை அறிவித்திருந்தது.
அதன்படி, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. பள்ளிகளில் உள்ள மாணவா்களின் எண்ணிக்கைக்கேற்ப சுற்றுகள் பிரிக்கப்பட்டு தோ்வுகள் நடத்தப்பட்டன. ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். தோ்வின் போது ஆய்வகத்தில் மாணவா்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநில தகைசால் பள்ளிக்குச் சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், அங்கு வேதியியல் பாட செய்முறைத் தோ்வு நடைபெற்ற அறையில் ஆய்வு செய்தாா். அப்போது அப்பள்ளியில் அடுத்தடுத்து நடைபெறவுள்ள செய்முறைத் தோ்வுகள் குறித்தும், அட்டவணை குறித்தும் ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, பிற்பகலில் செய்முறைத் தோ்வு எழுதவிருந்த மாணவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
பள்ளிக் கல்வி இயக்குநா் ஆய்வு...: இதேபோன்று சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆய்வு செய்தாா். அப்போது, அங்கு செய்முறைத் தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.