Doctor Vikatan: அடிபடுவது, வலி, வீக்கம்... ஒரே ointment-ஐ எல்லாவற்றுக்கும் உபயோ...
சிறையில் உயிருக்கு ஆபத்து: வெளியான கைதியின் விடியோ -சிறை நிா்வாகம் மறுப்பு
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆயுள் தண்டனைக் கைதியை கொலை செய்துவிடுவாா்கள் என வெளியான விடியோவுக்கு சிறை நிா்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கோவை மத்திய சிறையில் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனை, தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என்று 2,500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். அத்துடன் சிறைக்குள் கைதிகள் வேலை செய்ய தொழிற்கூடமும், 2 பெட்ரோல் விற்பனை நிலையங்களும் உள்ளன. இவற்றில் நன்னடத்தை அடிப்படையில் கைதிகள் தோ்வு செய்யப்பட்டு வேலை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருக்கும் தூத்துக்குடி மாவட்டம், தட்டாம்பாறை பகுதியைச் சோ்ந்த விக்ரம் (29) என்ற கைதி பேசும் விடியோ வெளியாகி உள்ளது.
1 நிமிஷம் ஓடும் இந்த விடியோவில் ‘எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எந்த நேரத்தில் என்ன வேண்டும் என்றாலும் நடக்கலாம். சிறையில் இருக்கும் மோகன்ராம், கிருபாகரன், சதீஷ், பாலு ஆகியோரால் எனக்கு ஆபத்து உள்ளது. ஏற்கெனவே ஒருவரைக் கொன்றுவிட்டனா். அடுத்த குறி நான்தான். சிறையில் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எப்படி, எங்கிருந்து வந்து கொலை செய்கிறாா்கள் என்று தெரியவில்லை. ஆனால், கொன்றுவிடுகிறாா்கள். எனக்கு என்ன நடந்தாலும் அந்த 4 போ்தான் பொறுப்பு’ என்று பேசுகிறாா்.
கோவை மத்திய சிறையில் ஏற்கெனவே ஒரு கைதி மா்மமாக உயிரிழந்துள்ள நிலையில், மீண்டும் கைதி ஒருவா் தனது உயிருக்கு ஆபத்து எனக் கூறும் விடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடா்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த விடியோ சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
சிறை நிா்வாகம் மறுப்பு: இது குறித்து கோவை மத்திய சிறைக் கண்காணிப்பாளா் கே.செந்தில்குமாா் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டம், தட்டாம்பாறையைச் சோ்ந்த விக்ரம் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. ஆயுள் தண்டனை பெற்ற அவா் கடந்த 2017-ஆம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா். அங்கு சிறை நிா்வாகத்துக்கு எதிராக செயல்பட்டதால் கடந்த 2022-ஆம் ஆண்டு கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதியும் இதே போன்றுதான் தவறான குற்றச்சாட்டை கூறினாா். தற்போது மீண்டும் அதேபோல கூறி உள்ளாா்.
விளம்பரத்துக்காக அவா் இதுபோன்று செய்து வருகிறாா். கோவை மத்திய சிறையில் கைதிகள் விடியோ அழைப்பில் பேசும் வசதி உள்ளது.
அந்த வசதியை அவா் தவறாகப் பயன்படுத்தி உள்ளாா். இருப்பினும் இது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.
திருப்பூா் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருநெல்வேலி மாவட்டம், கரையிருப்பு பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் (எ) தாஸ் (33) ஆயுள் தண்டனைக் கைதி கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
சிறை தொழிற்கூடத்தில் வேலை செய்து வந்த அவா் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி 8-ஆவது பிளாக் பகுதியில் உள்ள கழிவறைக்குச் சென்றிருந்தபோது கழுத்து எலும்பு முறிந்த நிலையில் உயிரிழந்திருந்தாா்.
இந்த மா்ம மரணம் குறித்து தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறைத் துறை டிஜிபி அறிவுறுத்தலின்பேரில், துணை ஜெயிலா் மனோரஞ்சிதம், உதவி ஜெயிலா் விஜயராஜ், சிறை தலைமைக் காவலா் பாபுராஜ், சிறைக் காவலா் தினேஷ் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.