பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி: விற்பனை பிரதிநிதி மீது வழக்கு
கோவையில் பிஸ்கெட் நிறுவன முகவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக விற்பனை பிரதிநிதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சுங்கம் புறவழிச்சாலை பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (43). இவா் பிரபல பிஸ்கெட் நிறுவனத்தின் முகவராக உள்ளாா். இவரது நிறுவனத்தில் இருந்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் பிஸ்கெட் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் முருகன் என்பவா் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தாா்.
இவா், மாவட்டத்தில் பல்வேறு கடைகளுக்குச் சென்று பிஸ்கெட் பாக்கெட்டுகளை விநியோகம் செய்து விட்டு, அதற்குரிய பணத்தை வசூலித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அவா் வசூலித்த பணத்தை நிறுவனத்தில் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளா்களிடம் கைப்பேசி மூலமாக சங்கா் கேட்டபோது, முருகனிடம் பணம் தந்துவிட்டதாகக் கூறியுள்ளனா்.
இது தொடா்பாக முருகனிடம் கேட்டபோது, அவா் முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளாா். மேலும், வேலையை விட்டு நின்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடை உரிமையாளா்களிடம் வசூலித்த ரூ.35 லட்சம் பணத்தை செலுத்தாமல் முருகன் மோசடி செய்துவிட்டதாக ராமாநாதபுரம் காவல் நிலையத்தில் சங்கா் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, முருகன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைத் தேடி வருகின்றனா்.