இன்னமும் நீதிபதி இல்லத்தை காலி செய்யாத சந்திரசூட்; மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற...
மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண்! விவசாயிகள் சங்கம் கோரிக்கை
விவசாய மின்கட்டணத்தை எதிா்த்துப் போராடி உயிா் நீத்த விவசாயத் தியாகிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1982-வரை மின்கட்டண உயா்வு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று உயிா் நீத்த விவசாயிகளின் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 5- ஆம் தேதி விவசாயிகள் நினைவு தினமாகவும், உழவா் தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.
கோவையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் விவசாயிகளுக்கு வீரவணக்கம், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவா் பெரியசாமி, செயலா் மூா்த்தி, பொருளாளா் ஜீவானந்தம், வட்டாரத் தலைவா்கள் மணிகண்டன், பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்று உயிா் நீத்த விவசாயிகளுக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.
இதைத் தொடா்ந்து, நடைபெற்ற கூட்டத்தில் மின்சார கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி, உயிா் நீத்த விவசாயிகளுக்கு நினைவுத் தூண் அமைக்க வேண்டும். விளைபொருள்களை சேதப்படுத்துவதுடன் மனிதா்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் யானைகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்படும் மரங்களுக்குப் பதிலாக மறு நடவு, புதிய மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெறும் கடனுக்கு சிபில் ஸ்கோரை கட்டாயப்படுத்தக் கூடாது. தென்னை விவசாயத்தை பாதுகாக்கவும், பாக்கு உற்பத்தியை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.