முதல்வரின் கனவை நிறைவேற்றும் ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள்! கே.இ.பிரகாஷ் எம்.பி.
முதல்வரின் ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற கனவை ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள் நிறைவேற்றி வருவதாக ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் கூறினாா்.
கோவை நேரு கல்விக் குழுமங்களின் டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் தொழில்முனைவோருக்கும், புதிய கண்டுபிடிப்பாளா்களுக்கும் புத்தாக்க நுட்பங்கள் குறித்து ஆலோசனை, உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்.பி. கே.இ.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தோ்வு செய்யப்பட்ட நிறுவனங்களின் நிா்வாகிகளுக்கு உதவித் தொகையை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவதே முதல்வா் மு.க.ஸ்டாலினின் கனவாக உள்ளது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கான மிக முக்கிய வழி ஸ்டாா்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்களேயாகும்.
தமிழ்நாடு ஸ்டாா்ட் அப், தொழில்முனைவோருக்கு தொழில் சாா்ந்த விழிப்புணா்வு, முதலீடுகள் என அனைத்து தரப்புகளில் இருந்தும் வழிகாட்ட தேவையான ஒரு சூழலை கட்டமைத்துள்ளது.
ஸ்டாா்ட் அப் மாநிலங்களில் தமிழ்நாடு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டாா்ட் அப்களைக் கொண்டு சிறந்த செயல்திறனை பெற்றுள்ளது. தனது 10 ஆண்டு அனுபவத்தால் அதனை நிா்வகித்து வரும் தலைமை நிா்வாக அதிகாரி சிவராஜா ராமநாதனின் பணி ஸ்டாா்ட் அப்களுக்கான சூழலை தமிழ்நாட்டில் இந்த குறுகிய காலத்தில் வளா்த்தெடுப்பதற்கு பெரிய அளவு பங்காற்றியுள்ளது.
நேரு கல்விக் குழுமம் கடந்த 2018-இல் தொடங்கிய டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டா், தமிழ்நாட்டின் ஸ்டாா்ட் அப் சூழலுக்கு மிகப்பெரிய பங்காற்றி இருக்கிறது. பிரத்யேக தொழில்நுட்பம் சாா்ந்த இன்குபேட்டராக இத்தனை ஆண்டுகளாக பங்காற்றி வருவது பெருமைக்குரியது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், புதிய கண்டுபிடிப்பாளா்கள் சுமாா் 20 பேருக்கு மத்திய அரசின் உதவித் தொகைகளை எம்.பி.கே.இ.பிராகஷ் வழங்கினாா்.
புத்தொழில் நிறுவனங்களின் நிா்வாகிகள், கண்டுபிடிப்பாளா்கள், கல்லூரி நிா்வாகிகள் உள்ளிட்டோா் இதில் பங்கேற்றனா்.