புகையிலை போதை பொருள்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல்
பெரம்பலூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக குட்கா உள்ளிட்ட புகையிலை போதைப் பொருள்களை விற்ற 5 கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை சீல் வைத்து, அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா உத்தரவின்பேரில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் காவல்துறை தனிப்படையினா் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அரணாரை, அரும்பாவூா், பெரியம்மாபாளையம், லப்பைக்குடிகாடு மற்றும் நல்லறிக்கை ஆகிய கிராம மளிகைக் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருள்களை பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்தக் கடைகளின் பதிவு மற்றும் உரிமச் சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 3 கடைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், 2 கடைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.