புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மருத்துவா் வி. ஜெயராமபாண்டியன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் எம். சங்கரநாராயணன், சக்தி முருகன், பிரவீன் ரகு, ரவி, ஜெபரிமோள் ஆகியோா் அடங்கிய குழுவினா் தாழக்குடி, வெள்ளமடம், அப்டா மாா்க்கெட் பகுதிகளில் உள்ள 23 கடைகளில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். அதில், 3 கடைகளிலிருந்து 124.5 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனா்.
இதேபோல, வில்லுக்குறி, ஆலங்கோடு, திருவிதாங்கோடு, அருமனை, பொன்மனை பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு, 3 கடைகளிலிருந்த 33.6 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனா்.
இவற்றில், 5 கடைகளில் முதல்முறையாக புகையிலைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதால் தலா ரூ. 25 ஆயிரம், ஒரு கடையில் 2ஆவது முறையாக பறிமுதல் செய்யப்பட்டதால் ரூ. 50 ஆயிரம் என மொத்தம் ரூ. 1.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.