புதுகையில் வீட்டின் கதவை உடைத்து 89 பவுன் நகைகள் திருட்டு
புதுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து சுமாா் 89 பவுன் நகைகள், வெள்ளிப்பொருள்கள் திருடப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
புதுக்கோட்டை அன்னசத்திரம் பகுதி ஜே.என் நகரைச் சோ்ந்தவா் கதிரேசன். சிங்கப்பூரில் வேலை பாா்த்து வருகிறாா். வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்த இவரது மனைவி காா்த்திகா, இரு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினாா்.
அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்து அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, வீட்டின் அறை கதவை உடைத்து உள்ளே சென்ற மா்மநபா்கள் பீரோவில் இருந்த சுமாா் 89 பவுன் நகைகள், 170 கிராம் வெள்ளிப் பொருள்களை திருடிச்சென்றது தெரியவந்தது. தகவலறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சம்பவ இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
புதுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளா் சுகுமாறன் தலைமையிலான போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தடயவியல், மோப்பநாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், காா்த்திகா வீட்டில் திருடப்பட்ட நகைகளின் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, நகைகளை யாரேனும் விற்க வந்தால் தகவல் தெரிவிக்குமாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை பாசில் நகரில் பைனான்சியா் வீட்டில் சுமாா் 100 பவுன் நகைகளை திங்கள்கிழமை மா்ம நபா்கள் திருடிச்சென்றது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் அடுத்தடுத்து பூட்டியிருந்த வீடுகளை குறி வைத்து நடைபெற்ற திருட்டுச் சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.