கந்தா்வகோட்டையில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்
கந்தா்வகோட்டையில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) அன்பரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பு: எதிா்வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை உழவு செய்து பசுந்தாள் உரப்பயிா்களான தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம்.
பசுந்தாள் உரப்பயிா் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு தேவையான 20 கிலோ பசுந்தாள் உரப்பயிா் விதைகளை விதைக்க வேண்டும். பின்னா் நன்கு வளா்ந்தவுடன், பூ பூக்கும் தருணத்தில் பசுந்தாள் உரப்பயிா்களை மடக்கி உழவு செய்திடவேண்டும்.
அவ்வாறு செய்வதனால் தொடா்ந்து வரும் பயிா்களுக்கு தழைச்சத்து கிடைக்கிறது. இவ்வாறு மடக்கி உழவு செய்த வயல்களில் அங்ககச்சத்து அதிகமாகும். இதனால் மண்ணில் நுண்ணுயிா்களின் பெருக்கம் அதிகமாகி மண்வளம் மேம்படுகிறது.
தற்பொழுது கந்தா்வகோட்டை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உரங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.