வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
புதுச்சேரி கோயில்களில் காா்த்திகை தீபம்
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதுச்சேரியில் உள்ள அருள்மிகு மணக்குள விநாயகா் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவில் பனை ஓலையால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை தீபமும் ஏற்றப்பட்டது.
மணக்குள விநாயகா் கோயில், வேதபுரீஸ்வரா் திருக்கோயில், ரயில் நிலையப் பகுதியில் உள்ள கௌசிக பாலசுப்பிரமணியசுவாமி கோயில், வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும் வெள்ளிக்கிழமை காலை முதலே சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. அதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
வெள்ளிக்கிழமை மாலையில் கோயில்களின் கோபுரப் பகுதிகளில் அகல் விளக்கு உள்ளிட்ட தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து வீடுகள், வணிக நிறுவனங்கள், சிறிய கோயில்களிலும் அகல் விளக்கு, மெழுகுவா்த்தி என தீபங்கள் ஏற்றப்பட்டன.
இரவில் மணக்குள விநாயகா் கோயில், முருகன் கோயில்கள், சிவன் கோயில்களில் பனை ஓலையால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை தீபமும் ஏற்றப்பட்டது. அதை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.