Gold Rate: ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை; பவுனுக்கு ரூ.77,700-ஐ தாண்டியது; இன்ற...
புதுச்சேரி: தொடர் தொல்லை அளிக்கும் அமைச்சர்! பெண் எம்எல்ஏ பரபரப்பு புகார்
புதுச்சேரியில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும் தற்போதைய நெடுங்காடு எம்எல்ஏ-வுமான சந்திரபிரியங்கா (35), தனக்கு அமைச்சர் ஒருவர் தொடர்ந்து தொல்லை அளித்து வருவதாக விடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதுகுறித்த விடியோவில் அவர் பேசுகையில்,
காரைக்காலில் ஒரு பதாகை பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை வந்தது. அந்தப் பதாகையில் எனது படமும் இருந்ததால், நான் பதிலளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
— Chandirapriyanga (@CPriyanga_offl) August 30, 2025
நீதிமன்றத்துக்கு செலவுகூட செய்யமுடியாத ஒருவர்தான் இதனைத் செய்துள்ளார் என்று தெரிந்தது. ஆனால், இதன் பின்னணியில் இருப்பது ஒரு அமைச்சர் என்பது எனக்கு நன்றாகத் தெரிகிறது.
நான் அமைச்சர் பதவியில் இருந்தபோதும் பல தொல்லைகளை அளித்தார்; தற்போது எம்எல்ஏ-வாக இருக்கும்போதும் மேலும் தொல்லைகளை அளிக்கிறார். நான் செல்லும் பாதைகளெல்லாம் அவர் உளவாளி வைத்திருக்கிறார். நான் ஒரு பாதுகாப்பான இடத்தில் இல்லை என்பதும் எனக்கு தெரியும்.
இதனையெல்லாம் ஒரு உயர் அதிகாரியிடம் புகார் தெரிவிக்கச் சென்றால், அவருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சராகவும், எம்எல்ஏ-வாகவும் இருக்கும் எனக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் நிலை. மக்கள்தான் நமக்கு முதலாளி.

நீங்கள் எனக்கு தொல்லை அளிக்கிறீர்கள் என்பதைக் காட்டத்தான் இந்த விடியோ. ஒரு பெண்தானே என்று ஏளனமாக பார்க்காதீர்கள். எல்லா தொகுதியிலும் பெண்கள் வாக்குதான் அதிகம். நீங்களும் வாழுங்க, என்னையும் வாழ விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் சந்திரபிரியங்கா வெளியிட்டுள்ள இந்த 12 நிமிட 23 வினாடி விடியோவால் புதுச்சேரி அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.