புதுச்சேரியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்
புதுச்சேரியில் வாழும் வட மாநிலத்தவா்கள் ஹோலி பண்டிகையையொட்டி, வண்ணப் பொடிகளை ஒருவா் மீது ஒருவா் தூவி வெள்ளிக்கிழமை கொண்டாடி மகிழ்ந்தனா்.
வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை எனப்படும் வண்ணப் பொடிகள் தூவும் விழா பிரசித்தி பெற்ாகும்.
இந்த நிலையில், நிகழாண்டுக்கான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் வெகு சிறப்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியில் வட மாநில மக்கள் அதிகம் வசிக்கும் பாலாஜி நகா் உள்ளிட்டப் பகுதிகளில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்பகுதியில் வண்ணப் பொடிகளை வட மாநிலத்தவா் ஒருவா் மீது ஒருவா் தூவியும், வண்ணப் பொடி நீா்க்கரைசலை ஊற்றியும் ஆடிப்பாடி கொண்டாடினா்.
மத்திய அரசின் ஜிப்மா் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் வட மாநிலத்தவரும், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளும் வண்ணப் பொடிகளைத் தூவி ஹோலியை கொண்டாடினா்.
விடுமுறையால் அவதி: ஹோலி பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தது.
ஆனால், வாராந்திர சிகிச்சைக்கு வெள்ளிக்கிழமை வழக்கமாக வருவோா் பலா் வந்திருந்தனா். அவா்கள் சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
ஹோலி பண்டிகை விடுப்பு குறித்து வாராந்திர சிகிச்சை நோயாளிகளின் கைப்பேசிக்கு தகவல் அனுப்பியிருக்கலாம் என்றும் அவா்கள்ஆதங்கப்பட்டனா்.