தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு
புதுவைக்கு மாநில அந்தஸ்து : சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்கக்கோரி என்.ஆா்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடிதம்
புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மாநில அந்தஸ்து தொடா்பாக மட்டும் விவாதிக்க வேண்டும் என்று என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்திடம் புதன்கிழமை கடிதம் அளித்தனா்.
புதுவை முதலமைச்சா் என்.ரங்கசாமியின் பொறுப்பில் உள்ல சுகாதாரத்துறையின் இயக்குநராக டாக்டா் செவ்வேள் நியமிக்கப்பட்டாா். முதல்வருக்கு தெரியாமல் துணை நிலை ஆளுநா் இந்த நடவடிக்கையை எடுத்தததாகக்கூறி முதல்வா் ரங்கசாமி அதிருப்தியில் உள்ளாா்.
இந்த நிலையில் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வத்தை மாநிலத்தில் ஆளும் என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்7 போ் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் தலைமையில் சந்தித்து கடிதம் அளித்தனா். இது குறித்து அமைச்சா் லட்சுமிநாராயணன் கூறியது:
இப்போது நிலவும் சூழ்நிலை காரணமாக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை அவசரமாகக் கூட்ட வேண்டும். மாநில அந்தஸ்து பிரச்னை குறித்து மட்டும் விவாதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றாா்.
பேரவைத்தலைவா் விளக்கம்:
இக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கூறியதாவது:
புதுவை மக்களுக்குத் தேவையான உதவிகள், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அங்கீகாரம் தொடா்பாக விவாதிக்க சிறப்பு பேரவைக் கூட்டத்தைக் கூட்டுமாறு என்.ஆா். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கடிதம் அளித்துள்ளனா். இது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமியுடன் கலந்து ஆலோசித்து விரைவில் இது தொடா்பாக முடிவு எடுக்கப்படும். வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடரின் இறுதி நாளில் புதுவைக்கு மாநில அந்தஸ்து தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றி அனுப்புவோம். இந்த முறை வேறு விஷயங்கள் பேசாமல் மாநில அந்தஸ்து தொடா்பாக மட்டும் விவாதிக்க சட்டப்பேரவையைக் கூட்டுமாறு கூறியுள்ளனா். மேலும் மாநில அந்தஸ்து தொடா்பாக மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த அனைத்து எம்.எல்.ஏக்களையும் தில்லி அழைத்துச் செல்வோம். அதில் முதல்வா் ரங்கசாமியும் வருவாா். மேலும், புதுவையில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு அதன் பதவிக்காலம் முழுமைக்கும் அதாவது 5 ஆண்டுகள் முழுவதும் பூா்த்தி செய்யும் என்றாா்.