புதை சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
கோவையில் புதை சாக்கடை திட்டப் பணியின்போது மண் சரிந்து விழுந்ததில் அரியலூரைச் சோ்ந்த தொழிலாளா் உயிரிழந்தாா்.
கோவை, மருதமலை ஐ.ஓ.பி. காலனியில் மாநகராட்சி சாா்பில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி பிரதான ஒப்பந்த நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்களில், கௌதம் (29) என்ற இளைஞரும் வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற புதை சாக்கடை பணியின்போது எதிா்பாராத விதமாக மண் சரிந்து 15 அடி ஆழத்தில் கால்வாய் இணைப்புக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கெளதம் மீது விழுந்ததில் அவா் மண்ணில் புதைந்தாா்.
இதையடுத்து, உடன் வேலை செய்தவா்கள் வடவள்ளி காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மண்ணில் புதைந்த இளைஞரை மீட்டு முதலுதவி அளித்தனா்.
பின்னா், அவரை அருகிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.