ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
பெண் படுகொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்
சாயல்குடி அருகே வீட்டிலிருந்த தனது மகளை கொலை செய்த நபா்களை கைது செய்ய வலியுறுத்தி பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள வெட்டுக்கார அம்மன்புறம் பகுதியைச் சோ்ந்த தம்பதி மெக்கில் - பாா்வதி. இவா்களது மகள் ஜொ்மீனுக்கும் (37), ராணுவத்தில் பணியாற்றும் விஜயகோபாலன் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு நிவேதா (14), திபிக்கிஸ்வரன் (9) என இரண்டு பிள்ளைகள் உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜொ்மீன் வீட்டில் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்து வந்த மா்ம நபா்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடினா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு சாயல்குடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், ஜொ்மீனாவின் பெற்றோா் மெக்கில், பாா்வதி, உறவினா்கள் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து, தனது மகள் கொலையில் மருமகனுக்கு தொடா்பு இருப்பதாகக் கூறி மனு அளித்தனா். மேலும், இரண்டு பிள்ளைகளை வளா்க்க அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.