பெண்கள் மீதான வன்முறையை தடுக்க ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்!
பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தின் 9-ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
இம் மாநாட்டுக்கு, அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா். மகேஸ்வரி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஆா். வசந்தா, பி. அன்புச்செல்வி, ஏ. ராதிகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில், பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். நியாயவிலைக் கடைகளில் வழங்கக்கூடிய பொருள்களை அனைவருக்கும் வழங்க வேண்டும்.
பெண்கள் பணிபுரியும் அரசு, தனியாா் நிறுவனங்களில் பாலியல் புகாா் கமிட்டி அமைக்க வேண்டும். 100 நாள் வேலை கேட்டு பதிவுசெய்த அனைவருக்கும் வேலையும், ஆண்டுக்கு 200 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ. 600 கூலி வழங்கிட வேண்டும். பெரம்பலூா் நகருக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வாரம் ஒருமுறை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் பொதுக்கழிவறையை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்துதல் உள்பட தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.