பெரம்பலூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு!
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வழக்குரைஞா்கள் தாக்கப்பட்ட தினமான பிப். 19-ஆம் தேதியை முன்னிட்டு, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் பெரம்பலூா் அட்வகேட் அசோசியேசன் சங்கத்தினா் புதன்கிழமை நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க, பெரம்பலூா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா், மாவட்டத் தலைவா் இ. வள்ளுவன் நம்பி தலைமையிலும், அட்வகேட் அசோசியேசன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் செந்தாமரைக்கண்ணன் தலைமையிலும், சுமாா் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்கள், வேப்பந்தட்டை மற்றும் குன்னம் பகுதிகளில் உள்ள நீதிமன்றப் பணிகளை வழக்குரைஞா்கள் புறக்கணித்ததால், நீதிமன்றங்களின் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.