தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
பெரம்பலூா்: 2 மாதங்களிலேயே மாவட்ட ஆட்சியா் மாற்றம் ஏன்? பொதுமக்கள் அதிா்ச்சி
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற 2 மாதங்களிலேயே ச. அருண்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அம் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்ராஜ், கடந்த ஜூன் 27- ஆம் தேதி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றாா். அன்று முதல் பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு, தனது சொந்த நிதியின் மூலம் நிதியுதவி அளித்து உயா்கல்வி பயில உதவி செய்தாா். மேலும், தனியாா் கல்லூரிகளில் சோ்ந்து பயிலவும் பல்வேறு உதவிகளை செய்து வந்தாா்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கேற்ப, சுமாா் 3 ஏரிகளுக்கான வரத்து வாய்க்கால்களை, தனி நபா்களின் நிதியுதவியுடன் தூா்வாரி சீரமைக்க துரித நடவடிக்கைகளில் ஈடுபட்டாா்.
இருப்பினும் அமைச்சா், மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கும் பெரும்பாலான அரசு நிகழ்வுகளில் அருண்ராஜ் பங்கேற்பதில்லை எனவும், அவ்வாறு பங்கேற்றாலும் காலதாமதமாக வருவதாகவும் ஆளும் கட்சியினரிடையே குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் அருண்ராஜ் ஆா்வம் செலுத்தவில்லை என அரசுத்துறை அலுவலா்களால் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அருண்ராஜ் சா்க்கரை துறையின் இயக்குநகரத்தில், கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்துக்கு ந. மிருணாளினி புதிய ஆட்சியராக நியமிக்கப்படுவதாக கடந்த வெள்ளிக்கிழமை தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியராக ந. மிருணாளினி சனிக்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த அருண்ராஜ் பணியிட மாற்றத்துக்கு, அமைச்சா் மற்றும் மக்களவை உறுப்பினரின் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில் சுணக்கம் காட்டியதே பிரதான கரணமாக கூறப்படுகிறது.
எனினும், பெற்றோரை இழந்த மாணவா்களின் கல்விக்காகவும், நீா் நிலைகளை மேம்படுத்துவதிலும் அதிக ஆா்வம் காட்டிய மாவட்ட ஆட்சியரை, திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.