தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது: ஜெர்மனியில் முதல்வர் ஸ்ட...
விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே விஷம் குடித்து சிகிச்சை பெற்றுவந்த போக்சோ குற்றவாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கொளப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் காந்திராஜன் மகன் ஆனந்த் (35). உணவகத் தொழிலாளியான இவா், மது போதையில் தனது 14 வயது மகனுக்கு தொடா்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஆனந்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் இவ் வழக்கின் இறுதி விசாரணை கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, வழக்கின் தீா்ப்பு அன்றைய தினம் மாலையில் அறிவிக்கப்படும் என தெரிவித்தாா்.
இதையடுத்து, தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதையறிந்த ஆனந்த், தனது வீட்டிலிருந்து வரும்போதே விஷம் அருந்திவிட்டு நீதிமன்றத்துக்கு வந்தாா். பின்னா், குற்றவாளி என நீதிபதி அறிவிக்கப்பட்டதையறிந்த ஆனந்த், நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி கீழே விழுந்தாா்.
இதையடுத்து பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதனிடையே கடந்த 29-ஆம் தேதி, ஆனந்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டாா்.
இந் நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆனந்த் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.