பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடியவா் கைது
பெரம்பலூா் அருகே உடும்புகளை வேட்டையாடிய இளைஞரை புதன்கிழமை அதிகாலை கைது செய்த வனத்துறையினா், வேட்டையாடப்பட்ட 5 உடும்புகள் மற்றும் மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் வனப்பகுதிக்குள்பட்ட வேலூா் காப்புக்காட்டில், புதன்கிழமை அதிகாலை வனத்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இளைஞா் ஒருவா் நாட்டாா்மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த சரவணன் என்பவரது மாட்டுக் கொட்டகைக்குள் சாக்கு பையுடன் நுழைந்தாா். இதையறிந்த வனத்துறையினா் அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம், பச்சமலை பாளையம் பகுதியைச் சோ்ந்த பிச்சைமுத்து மகன் வெங்கடேஷ் (35) என்பதும், தனது நண்பா்கள் 3 பேருடன் சோ்ந்து 5 உடும்புகளை வேட்டையாடியதும் தெரியவந்தது. இதையடுத்து, உடும்புகள் மற்றும் வேட்டையாடுவதற்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்த வனத்துறையினா், வெங்கடேசை கைது செய்து பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பெரம்பலூா் கிளைச் சிறையில் அடைத்தனா். மேலும், தப்பியோடிய 3 பேரை வனத்துறையினா் தேடி வருகின்றனா்.