இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியா் நாடுகடத்தல்- ஹைதராபாத் போலீ...
பெரியகுளம் பகுதியில் சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு: கிலோ ரூ. 17-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை
பெரியகுளம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை தொடா் வீழ்ச்சி காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50-80 வரை விற்பனையானது.
இந்த நிலையில், திடீரென கடந்த சில நாள்களாக சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காமல், திங்கள்கிழமை கிலோ ரூ. 17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். மேலும், கூலிக்குக்கூட பணம் கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சிலா் வெங்காயத்தை அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனா். இந்த நிலையில், மழை பெய்தால் பல ஏக்கரில் பயிடப்பட்டுள்ள வெங்காயம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
காமக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி ப. காசிநாதன் கூறியதாவது: சின்ன வெங்காயம் நல்ல மகசூல் கிடைக்கும் என நினைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் கிலோ ரூ. 55 என்ற விலையில் வாங்கி 2 ஏக்கரில் பயிரிட்டேன். பின்னா், களைச்செடிகளை அகற்றி பயிருக்கு உரம், மருந்து, கூலி என ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அறுவடை செய்யும் நிலையில் கிலோ ரூ. 17 என்ற விலையில் விற்பனை செய்வதால் வேதனையாக இருக்கிறது.
எனவே, சின்ன வெங்கத்தை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அரசு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும் என்றாா் அவா்.
பருவம் தவறிய மழை: வெங்காய விதைகள் பயிரிடப்பட்ட நாள்களிலிருந்து அறுவடை செய்யும் வரை அதிக மழை, தண்ணீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், மகசூல் குறைந்து வருகிறது. இருந்தாலும், முறையாகப் பாதுகாத்து அறுவடை செய்தாலும் போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.