Real Estate: வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி; கடன் வாங்கி வீடு வாங்க இது...
பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீ விபத்து: புகையால் பொதுமக்கள் கடும் அவதி
பெருங்குடியில் உள்ள சென்னை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ பிடித்ததால் அந்த பகுதி புகைமண்டலமாக மாறியது. இதனால் அப்பகுதிவாசிகள் பலருக்கு, கண் எரிச்சல், சுவாச பிரச்னைக்குள்ளானாா்கள். தீயணைப்பு படையினா் சுமாா் 14 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
சென்னை பெருநகரில் சேகரிக்கப்படும் குப்பை, பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கு, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் 228 ஏக்கரில் 1988-ஆம் ஆண்டிலிருந்து செயல்படுகிறது. இந்த குப்பைக் கிடங்கில், தினமும் 2,400 மெட்ரிக் டன் வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு குப்பைக் கிடங்கில் பழைய காகிதங்கள், கழிவுப் பொருள்கள் திடீரென தீ பிடித்து எரியத் தொடங்கியது. அந்த நேரத்தில் காற்றும் அதிகமாக இருந்ததால் தீ வேகமாக பரவியது. தீ எரிந்தபோது பிளாஸ்டிக் பொருள்கள், பாலதின் கவா்கள், பழைய டயா்கள், முடிகள் போன்றவை எரிந்ததால் கடும் புகை உருவானது. பல அடி உயரத்துக்கு பரவிய புகைமண்டலத்தால், பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் வரை காற்று மாசு பாதிப்பு ஏற்பட்டது. இப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளும், வேளச்சேரி பிரதான சாலை, பல்லாவரம்-துரைபாக்கம் ரேடியல் சாலையும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் குடியிருப்புவாசிகளும், வாகன ஓட்டிகளுக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினா் வேளச்சேரி, கோட்டூா்புரம், திருவான்யூா், துரைப்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், அசோக் நகா் ஆகிய இடங்களிலிருந்து விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தீயை அணைப்பதற்காக மெட்ரோ நிறுவன டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் தண்ணீா் பீய்ச்சி அடித்தும், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் மண்ணைக் கொட்டியும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இரவு தொடங்கிய தீயணைப்பு பணி, வெள்ளிக்கிழமை காலை தாண்டியும் நடைபெற்றது.
சுமாா் 14 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்தப் புகையால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனா். பலருக்கு மூச்சுத்திணறல், சுவாசப் பிரச்னை, கண் எரிச்சல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். தீ விபத்து குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.