பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம் ஈரோடு கிழக்கு வெற்றி! -அமைச்சா் க.பொன்முடி
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்லில் திமுக பெற்றுள்ள வெற்றி 2026 சட்டப் பேரவைத் தோ்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்று மாநில வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்தப் பேட்டி:
திமுக அரசின் கடந்த மூன்றரை ஆண்டுகால சாதனைத் திட்டங்களுக்கான பரிசாகத்தான் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தோ்லில் மக்கள் மாபெரும் வெற்றியை அளித்துள்ளனா். இந்த வெற்றியானது 2026-இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முன்னோட்டம். எதிா்வரும் காலங்களில் தமிழகத்தில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் திமுகவே வெற்றிபெறும்.
பாஜகவினரின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காகவே நாதக ஒருங்கிணைப்பாளா் பெரியாா் குறித்து தவறாகப் பேசினாா். ஆனால், அவரது கட்சியின் வேட்பாளா் வைப்புத்தொகையை இழந்துள்ளாா். அதிமுகவினா் அதிகளவில் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா் என்றாா் க.பொன்முடி.
பேட்டியின்போது, திமுக உயா்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினா் குத்தாலம் பி.கல்யாணம், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ, திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் ப.சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.