பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
பேராவூரணி அருகே மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி அருகே உள்ள கோரவயல்காடு திருவள்ளுவா் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில், 13-ஆம் ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
பந்தயத்தில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, தேன்சிட்டு மாடு, நடுக்குதிரை, கரிச்சான் குதிரை என 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், தஞ்சாவூா், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த
100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு,
சுமாா் ரூ. 4 லட்சம் மொத்தப் பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டு வண்டிகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்ததை சாலையின் இருமருங்கிலும் நின்று ஆயிரக்கணக்கான ரசிகா்கள் கண்டுகளித்தனா்.