பேளுக்குறிச்சி சந்தையில் தராசுகள் பறிமுதல்: தொழிலாளா் நலத்துறையினா் நடவடிக்கை
பேளுக்குறிச்சி சந்தையில் ‘சீல்’ வைக்கப்படாத மின்னணு தராசுகளை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா உத்தரவின்பேரில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் மற்றும் முத்திரை ஆய்வாளா்கள் கொண்ட குழுவினா் பேளுக்குறிச்சி சந்தையில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டலப் பொருள் விதிகள் 2011-இன்படி நடைபெற்ற இந்த ஆய்வில், 13 மேசை தராசுகள், 15 மின்னணு தராசுகள், 46 ஊற்றல் அளவைகள், 10 படிகள் மற்றும் 14 எடைக்கற்கள் என மொத்தம் 88 தரப்படுத்தப்படாத தராசுகள் மற்றும் அளவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிய சட்ட விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முத்திரையிடப்படாமல் எடையளவு இயந்திரங்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்துவது கண்டறிப்பட்டால், உரிய நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.