சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் ரவீனா தாஹா.. அப்போ ரெட்கார்டு?
பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டிப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டானது.
திருப்பத்தூா் அருகேயுள்ள பூமலந்தான்பட்டியைச் சோ்ந்த சின்னக்காளை மகன் கருப்பையா (40). அதே பகுதியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் பூமிநாதன் (42). இவா்கள் இருவரும் ஊரில் நடைபெறும் திருவிழாவுக்காக, திங்கள்கிழமை இரவு பொருள்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை சாலையில் சென்றனா்.
அப்போது பாப்பான் கண்மாய் அருகே சிவகங்கையிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.
இந்த விபத்தில் கருப்பையாவின் வலது கால் துண்டானது. பூமிநாதனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு, மருத்துவா் முத்துசிங்காரம், விபத்துக்குள்ளான கருப்பையாவின் காலை பதப்படுத்தி, ஐஸ் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, அவரை உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மற்றொருவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். துரிதமாகச் செயல்பட்ட மருத்துவரை அனைவரும் பாராட்டினா்.
இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.