மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்:
சிவகங்கை மாவட்டம், எஸ். மாம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தும்பைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கல் குவாரிக்கு கடந்த 12.6.2024-இல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
இந்தக் குவாரி அமைப்பது தொடா்பாக கிராம மக்களிடம் கருத்துகளைக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்து எந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை. ஊராட்சியின் அனுமதி தீா்மானமும் பெறப்படவில்லை. சுற்றுச்சூழல், சமூக விளைவுகள் குறித்து மக்களிடம் விளக்கப்படவில்லை. ஆனால், இந்தத் திட்டம் தொடா்பாக பல்வேறு விதிமீறல்கள், பாதிப்புகள் உள்ளன.
காப்புக்காடு பகுதிக்கு 100 மீட்டருக்குள்ளே குவாரி அமைத்திருப்பது சுற்றுச்சூழல் சட்டத்தை மீறும் செயலாகும். வெடி வைத்து பாறையைத் தகா்ப்பதால், வனத்தில் உள்ள மான், காட்டு எருமை போன்ற விலங்குகள் ஊருக்குள் வந்து, வாகனங்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
ஏற்கெனவே மல்லாகோட்டை பகுதியில் இயங்கி வந்த கல் குவாரியில் பாறை சரிந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தால் மூடப்பட்ட அந்தக் கல் குவாரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் இந்தக் குவாரி அமைக்கப்பட்டது. மேலும், கிராமத்திலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் இருப்பதால், வெடி சப்தம், தூசி, காற்று, நீா் மாசுபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கனரக வாகனங்களைத் தொடா்ந்து இயக்கி வருவதால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், சாலைகளும் சேதமடைகின்றன. குவாரிக்கு அனுமதி பெறும் நடைமுறைகளைப் பின்பற்றப்படாமல் சட்ட விதிமீறல் நடைபெற்றுள்ளது.
மேலும், எதிா்காலத்தில் இதே பகுதியில் எந்தக் குவாரிக்கும் அனுமதி வழங்கக் கூடாது. எனவே, இந்த கிராவல், கிரானைட் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும்.
இந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை உடனடியாக ரத்து செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.