சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
பொது இடங்களிலுள்ள மரங்களை வெட்டுவதை அனுமதிக்கக் கூடாது: தண்ணீா் அமைப்பு வலியுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது என தண்ணீா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக, அந்த அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் கூறியதாவது:
திருச்சி திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலையில் உள்ள அடுக்குமாடி குடிருப்பு அருகே 15 ஆண்டுகளுக்கு மேலான புங்க மரம் இருந்தது. பல்வேறு வகையிலும் மக்களுக்கு பயனளித்த வந்த இந்த மரத்தை குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, மாநகராட்சியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வெட்டியுள்ளனா்.
முறையான அனுமதியோடு சாலை விரிவாக்கம் அல்லது இதர வளா்ச்சி பணிகளுக்காக மரங்கள் வெட்டப்பட்டால், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வளா்க்க வேண்டும் என்று பல்வேறு வழக்குகளில் உயா்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
அண்மையில், அரச மரத்தின் ஒரு கிளையை வெட்ட அனுமதி வாங்கிவிட்டு கூடுதலாக 4 கிளைகளை வெட்டிய நபருக்கு ஒரு கிளைக்கு ரூ. 26,000 வீதம் ரூ.1.04 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி.
எனவே, அரசிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக மரத்தை வெட்டியவா்கள் மற்றும் இதற்கு துணையாக இருந்தவா்கள் மீது உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெட்டப்பட்ட மரத்துக்கு ஈடாக 10 புதிய மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்க வலியுறுத்துவதோடு, குற்றவியல் நடவடிக்கையை திருச்சி மாநகராட்சி ஆணையரும், திருச்சி மாவட்ட ஆட்சியரும் எடுக்க வேண்டும். இனி, எந்தவொரு பொது இடத்திலும் மரங்களை வெட்ட அனுமதிக்கக் கூடாது என்றாா் அவா்.