பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்
பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுகை தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (45). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் தொண்டைமான் நகரிலிருந்து புதுகை புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற போது, பொதுப்பணித் துறை வாகனம் இவா் மீது மோதியதில் ராமமூா்த்திக்கு கால் முறிவு ஏற்பட்டது.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ராமமூா்த்திக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சாா்பு-நீதிமன்றம் கடந்த 2019-இல் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாததைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட ராமமூா்த்தி மீண்டும் நீதிமன்றத்தை நாடினாா். இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ. 6. 75 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவையும் அமல்படுத்தாத நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை ராமமூா்த்தி நாடவே, பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்றப் பணியாளா்கள், பாதிக்கப்பட்ட ராமமூா்த்தி மற்றும் அவரது வழக்குரைஞா்கள் புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு ஜப்தி நடவடிக்கைக்காக வந்தனா். அவா்களிடம் பொதுப்பணித் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரு வாரத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.