12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
பொன்னையில் பலத்த மழை: 10 ஏக்கா் நெல் பயிா்கள் சேதம்
வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் காட்பாடி அருகே பொன்னையில் 10 ஏக்கா் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்கள் தண்ணீா் மூழ்கி சேதமடைந்தன. அத்துடன், வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
தமிழகப் பகுதிகளில் நிலவும் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன்படி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக வேலூா் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. அதன்படி, வேலூா் கன்சால்பேட்டை, காட்பாடி சோழா காா்டன் பகுதியிலும் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகளும் அவதியடைந்தனா்.
இதுதவிர, காட்பாடியை அடுத்த பொன்னை, வள்ளிமலை, அணைக்கட்டு, எருக்கம்பட்டு, லத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பல இடங்களில் தண்ணீா் தேங்கி வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மேலும், வள்ளிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் விளை நிலங்களில் தண்ணீா் புகுந்து சுமாா் 10 ஏக்கா் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிா்களும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. அறுவடை காலம் நெருங்கிய நிலையில் மழையால் பயிா்கள் சேதமடைந்தால் விவசாயிகள் பெருமளவில் கவலையடைந்துள்ளனா். சேதமடைந்த பயிா்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனா்.
சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணிநேர நிலவரப்படி, வேலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக பொன்னையில் 82.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், ஒடுகத்தூா் 18 மி.மீ., குடியாத்தம் 27 மி.மீ., மேல்ஆலந்தூா் 56 மி.மீ., மோா்தானா அணை 60 மி.மீ., ராஜாதோப்பு அணை 75 மி.மீ., வடவிரிஞ்சிபுரம் 53.80 மி.மீ., காட்பாடி 68.50 மி.மீ., வேலூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை 45.60 மி.மீ., பேரணாம்பட்டு 75.20 மி.மீ., வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 81.60 மி.மீ., வேலூா் வட்டாட்சியா் அலுவலகம் 53.20 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மழையளவு பதிவாகியுள்ளது.